திருச்சிற்றம்பலம்
“காஞ்சிபுராண அரங்கேற்றம் “
அருணையார் காஞ்சியில் வசித்து வந்த காலத்தில் பட்டுமளிகைத் தொழிலதிபர் நடேச முதலியார் என்பவர் நீங்கள் எங்கள் வீட்டில் வாடகையின்றிக் குடியிருங்கள். என்னாலாகிய உதவியை செய்கிறேன் என்றார்.
ஆகையால் தமது மனைவியாருடன் ஓரே மகளுடன் குடியேறினார்.
காஞ்சிபுராணத்திற்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகுநாள்களாகவே அடி மனதில் இருந்தது.
நடேச முதலியாரின் ஊக்கத்தின் பேரில் உற்சாகமாக உரை எழுத தொடங்கினார்.
காஞ்சிபுரம் குமரன் அச்சக உரிமையாளர் குப்புசாமி முதலியார், பச்சையப்ப முதலியார், துரைசாமி முதலியார், நடேச முதலியார், ஆகிய நான்கு பேரும் இணைந்து மாதம் ரூபாய் 50/- ஊதியமும், அச்சிட ஆகும் செலவினையும் ஏற்றனர்.
1936 அக்டோபர் மாதத்தில் உரை எழுத தொடங்கினார்.
அருணையாருக்கு அப்பொழுது முப்பது வயதே நிரம்பவில்லை.
தமது சிறுவயதிலேயே ஆலாலசுந்தரம் பிள்ளைகளுடைய காஞ்சிபுராண உரையை நன்கு படித்து இருந்தார்கள் ..
காஞ்சிபுராண உரை பத்து பக்கம் இருபது பக்கம் எழுதினால் கூட உடனே குமரன் அச்சகத்திற்கு போய் சேர்ந்துவிடும்.
காலதாமத்தினை தவிர்க்கும் பொருட்டு, குமரன்
அச்சகத்திற்கு எதிரே ஒரு வீட்டில் நான்கு ரூபாய் வாடகைக்கு குடியேறினார்.
அப்போது மாதம் ஐம்பது ரூபாயை தவிர பெருமான் திருவருளால்
சிலர் உதவினர்.
இரவு பகல் பாராமல் உரையை எழுதிக்கொண்டே இருந்தார்.
ஒருநாள் வீட்டில் உணவு சமைப்பதற்கு ஒன்றும் வழியில்லாமல் அருணையாரின் துணைவியார் சுவற்றின் மீது சாய்ந்து கொண்டு அமைதியாக இருந்தாராம்.
அருணையாரோ இல்லத்தில் உணவிற்கு வழியில்லாத நிலையை உணர்ந்தும், சிறுபெண் குழந்தை வீட்டில் இருப்பதையும் பற்றி கவலையின்றி கருமமே கண்ணாக உரை எழுதிக் கொண்டே இருந்தாராம்.
அப்போது பகல் பன்னிரெண்டு மணியளவில், அவரது சொந்த கிராமமான புலிவாயிலிருந்து அருணையாரிடம் சோதிடம் பார்க்க வேண்டி ஒர் அம்மையார் வீட்டிற்கு வந்தார்.
வரும்போதே வீட்டின் சூழ்நிலையை நன்கு உணர்ந்து ஒருமரக்கால் அரிசி,பருப்பு,
காய்கறிகளுடன் வந்து இருந்தார்.
புலிவாயில் இருந்து வந்த அம்மையாரின் பெயர் காமாட்சி அம்மாள்.
அருணையாரிடம் அவரது ,
துணைவியார்
“காமாட்சியம்மை கொண்டு வந்து கொடுத்தார்” என்று சொல்லிவிட்டு சமைக்கத் தொடங்கினார்.
ஒரு சிவராத்திரி தினத்தில் மாலை வழிபாட்டை முடித்துவிட்டு உரை எழுத தொடங்கினார்.
அதன் பிறகு நேரம் போவதே தெரியாமல் எழுதிக்கொண்டே இருந்தார். நேரம் என்னவாயிற்று என்று நோக்கிய
பொழுது காலை ஐந்து மணி ஆக ஒரு சில நிமிடங்களே இருந்தன. இவையெல்லாம் ஓர் அரிக்கன் விளக்கில் (மின்சார ஒளியில்லாமல்) எழுதப்பட்டவையாகும்.
இவ்வாறெல்லாம் அரும்பாடுபட்டு எழுதிய காஞ்சிபுராண உரை, அருள்மிகு ஏகாம்பரசுவரர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விகடச்சக்கர விநாயகர் திருமுன்பு 1937ல் காஞ்சி மெய்கண்டார் கழகப் பதிப்பாக வெளியீடு செய்யப்பட்டது.
அப்போது அதன் விலை ஒரு பிரதி ரூபாய் மூன்றும், முன்பணம் செலுத்துபவற்கு ரூபாய் இரண்டரை(2.50) என்று நிர்ணயிக்கப்பட்டது.
இருந்தும் ஒரு சில பிரதிகளே விற்பனை ஆயின. அக்கால சூழ்நிலை வாங்குவதற்கு ஆர்வம் இருந்தும் பணம் இல்லாமல் வாங்க இயலாமல் இருந்தனர்.
நீண்ட நாட்கள் விற்காமல் எஞ்சிய பகுதிகள் குமரன் அச்சகத்தில் இருந்தன.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பின்பு மெய்கண்டார் கழக செயலாளராக இருந்த திரு.வீ.திருஞானசம்பந்த முதலியார் அவர்களின் பெருமுயற்சியால் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மகாவித்துவான் கல்வியறிவின் சிறப்பை தமிழகத்தில் உள்ள சான்றோர்களால் இக் காஞ்சிப் புராண உரையின் மூலமே அறியலாயினர்.
அப்படி அறிந்தவர்கள் உரை எழுதியவரின் வயது குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று நினைத்து இருந்தனர்.
அவ்வாறு நினைத்தவர்களுள் திருநெல்வேலி தமிழ்ப் பேராசிரியர், மும்மொழிப்புலவர் திரு.சிதம்பரம் பிள்ளையவர்கள்.
அவர் ஞானியார் சுவாமிகளுக்கு பின் ஏகாம்பரசுவரர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் சொற்பொழிவு ஆற்ற வேண்டி, காஞ்சிபுரம் வருகை புரிந்து தொண்டை மண்டல ஆதினத்தில் தங்கினார்.
அப்போது அங்கு அவரை வரவேற்க குழுமியிருந்த வரவேற்பு குழுவினரை நோக்கி இங்கு அருணை வடிவேலு முதலியார் இருக்கிறாரா? என்று கேட்டார்.
அவ் வரவேற்பு குழுவினர் சிறிது ஓரமாக நின்று கொண்டு இருந்த அருணையாரை சுட்டிக்காட்டினர்.உடனே அக்காட்சி அவரை தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சியில் இருந்த மீளாத அப்பெரும்புலவர் அருணையாரை வியந்து நோக்கி இவரா அருணை வடிவேலு முதலியார் என்று குழுவினரை பார்த்து கேட்டார்.காஞ்சிப்புராண உரையை படித்ததில் நூலாசிரியருக்கு குறைந்தது அறுபது வயது இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் இந்த “சின்ன உளியா இதைச் செதுக்கியது”? என்று அருணையாரின் உரைநுட்பத்தை பாராட்டி மகிழ்ந்தாராம்..
காஞ்சிப்புராண உரை
வெளியீட்டின் போது சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் அன்றைய செயலாளராக இருந்த திரு.ம.பாலசுப்பிரமணிய முதலியார், “சைவப்பாதியார்” என்று பாராட்டப் பட்ட திரு.சச்சிதானந்தம் பிள்ளை, போன்ற சான்றோர் பெருமக்கள் கலந்துகொண்டு “உரைநுட்பத்தை” மிகவும் பாராட்டி பேசினார்களாம்.
இந்த அற்புதமான காஞ்சிப்புராண உரையை மீண்டும் வெளியிட அக்காலத்தில் புகழ்பெற்ற ஒருபதிப்பகத்தை அருணையார் அவர்கள் 1967 ஆம் ஆண்டு தமது மகன் பாலாறாவாயனோடு ,சென்னை சென்று அப்பதிப்பகம் காலையில் திறப்பதற்கு முன்பே பதிப்பக வாயிலில் காத்துக்கொண்டு இருந்தார்கள். அப்புத்தகத்தை பார்த்துவிட்டு 1500 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தை யாரும் படிக்கமாட்டார்கள் வேறு ஏதாவது இராமாயணம், மகாபாரதம் போன்று எழுதி வாருங்கள் பார்க்கலாம் என்று மறுத்துவிட்டார்..
மனம் ஒடிந்த நிலையில் அப்புத்தகத்தை அவர் கைக்குழந்தையை சுமப்பது போன்று சேர்த்து அணைத்துக்
கொண்டு முகம் வாடி நடந்து வந்த நிகழ்ச்சியை அவரது அருந்தவப்புதல்வர் அருணை பாலாறாவாயன் அவர்கள் தற்போதும் சொல்லி நெஞ்சம் நெகிழ்வார்.
அருணையார் சிவப்பேறு அடைதல்:-
1937ல் வெளிவந்த காஞ்சிப்புராண உரையினை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று அவரது ஆர்வத்தினை, ஆசையை அவர் வாழ்ந்த காலத்தில் புறக்கணித்து நிராசையாகவே போனது ஏனோ தெரியவில்லை. திருஏகம்ப
பெருமான் திருவடியில் கிபி 2000 ஆண்டில் தமது 93வயதில் சென்று சேர்ந்துவிட்டார்.
அவரது உடலை இடுகாட்டில் தீ வைக்கும் போது அவரது மகனார்
“ஒரு நூலகத்திற்கு தீ வைக்கிறேன் ” என்று நெஞ்சம் நெக்குருகி கண்கலங்கி கதறிய காட்சியை கண்டவர்களின் மனம், கருங்கல் மனமுமாக இருப்பினும் கரைந்து உருகும்.
அவரது திருவுள்ளத்தை அறிந்த திருவேகம்ப பெருமான் மீண்டும் வரசக்தி விநாயகர் சில்க் அவுஸ், விநாயகர் திருவருளால் திரு.தாமோதரன் பொருட் செலவில், ஆன்மீக அன்பர்களின் பெருமுயற்சியாலும் 2000 ஆம் ஆண்டியிலேயே வெளியானது.
அப்போது பேராசிரியர் எழுதிய கவிதையில்
“அப்பா இப்பாரினில் இல்லை ஆனால் பார்க்காமல் இல்லை”
என்று பாடினார்.
தற்போது மீண்டும் காஞ்சியில் சமயச்செம்மல் திரு.சதாசிவம் அவர்களது பெருமுயற்சியால் திருமுறை அருட்பணி அறக்கட்டளை மூலமாக 2021 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேசுவரர் ஆலயத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது..
“காஞ்சி வசிக்க முத்தி!
“காஞ்சிப்புராணம் வாசிக்க முத்தி!
காஞ்சிக்குப் பட்டு சேலை வாங்கவரும்
போது – இந்த பட்டு நூலையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள்!
என தமது தந்தையின் நூலுக்கு பாமாலை சூட்டினார் மகன்”..
இச்செய்திகள் “அருணையாரின் வாழ்வும் பணிகளும்” என்ற ஆய்வேட்டில் இருந்து பதியப்பட்டது.
திரு.கு.திருநாவுக்கரசு என்ற அவரது கடைசி மாணவர் தமது (எம்பில்) .. பட்டத்திற்கு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட
பதிவேட்டில் இருந்து பதிவு செய்தேன் ..
அடியேன்…….
inspired, motivated and blessed to read this great work.